பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

சித்திரைத் திருவிழா, கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. கடந்த 27ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 28ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நாளான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது, சுந்தரராஜப்பெருமாளான கள்ளழகர், கடந்த 28-ம் தேதி அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி கிளம்பினார். வரும் வழியில் நானூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, நேற்று மாலை மதுரை வந்துசேர்ந்தார்.
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியவர், இன்று அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையை அணிந்துகொண்டு தங்கக்குதிரையில் ஏறி 5 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்துசேர்ந்தார். ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதன் பின்பு, 6 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார். அங்குத் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் கோவிந்தா என கோஷம் எழுப்பியும், மலர் தூவியும் வரவேற்று பரவசமடைந்தனர். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல்துறை கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் குடும்பத்துடன் வருகைதந்தனர். இதற்காக, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டது. கள்ளழகரைக் காண தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர்.