ஒன்றரை டன் மலர்களால் உருவாக்கப்பட்ட மீனாட்சி-சொக்கர் மணமேடை - களைகட்டிய திருக்கல்யாண வைபோகம்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே மேற்கு ஆடி வீதி மற்றும் வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில்தான் மணமேடை அமைக்கப்பட்டது
மணமேடையின் மேற்கூரை 60 கிலோ வெட்டிவேர்களைக் கொண்டு வேயப்படடிருந்தது இதனால் கோவில் முழுவதும் நறுமணம் வீசுவதோடு மிகக் குளுமையாக உணர முடிந்தது மணமேடை அலங்காரத்திற்காக பெங்களூரு, ஊட்டி, கொடைக்கானலிலிருந்து ரோஜா, ஜர்டிரா, ஆர்கேட் போன்ற பூக்கள் ஒன்றரை டன் அளவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அலங்காரப்பணியில் மட்டும் 70 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரை புதுமையான முறையில் இலைகளால் உருவாக்கப்பட்ட பொம்மை பச்சைக்கிளிகள் தொங்கவிடப்படவுள்ளன. இதற்காக திருவில்லிப்புத்தூரில் இலைக்கிளிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பல்லாயிரகணக்கானோர் பங்குபெற உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாநகர் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பக்தர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய ஆங்காங்கு சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் வசதி், இரண்டு நடமாடும் மருத்துவ குழுக்கள், நடமாடும் கழிப்பிட வசதி போன்றவை மதுரை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தால் செய்யப்பட்டு உள்ளது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ் ராவ், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கியநிகழ்வான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலகமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாணநேரத்தில் திருமாங்கல்யம் மாற்றிக்கொண்டு பெண்கள் வழிபட்டனர்.

உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 18ம்தேதி மீனாட்சியம்மன்திருக்கோயில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்துசுவாமி, அம்மன் பல்வேறுவாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 25ம்தேதி பட்டாபிசேகமும், நேற்று திக்விஜயமும் சுந்தரேசுவரர் அழைப்பை மையமாக வைத்து சீர்வரிசை உலா நடைபெற்றது. சித்திரை திருவிழாவில் முக்கிய விழாவாக கருதப் படும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 9.05-9.29மணிக்குள் நடைபெற்றது. இதற்காக கோவிலில் உள்ளவடக்கு –மேல ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடை பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடை, மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றத்திலிருந்து வந்த சுப்பிரமணிய சுவாமி, பவளக்கனிவாய்ப்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் எழுந்தருள, மீனாட்சியம்மன் சார்பாகவும், சுவாமி சுந்தரேசுவரர் சார்பாகவும் சிவாச்சாரியார்கள் அம்மனாக, சுந்தரேசுவரராக வேடமணிந்து திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனர். விக்னேசுவர பூஜை கலச பூஜைகள் நடைபெற்றது, சுவாமி அம்மன் காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் தாரைவார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்த பின்னர், 3முறை மாலைமாற்றிக்கொண்டனர். பின்னர் சுவாமி பிரியாவிடை, மீனாட்சிஅம்மனுக்கு பட்டுவேட்டி சேலைகள் அணிவிக்கப்பட்டது. கெட்டி மேளங்கள் மேளதாளங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலிக்க முதலில் மீனாட்சியம்மனுக்கும், பின்னர் பிரியாவிடைக்கும் வைரத்தாலி எனப்படும் வைரத்தினால் ஆன திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் அங்கு திரண்டிருந்த பக்தர்களும் பெண்கள் தங்களது கழுத்தில் திருமாங்கல்ய கயிறுகளைக் கட்டி புதிததாக மாற்றிக்கொண்டனர். பக்தர்கள் மகிழ்ச்சிகரமாக புதிய திருமாங்கல்யம் மாற்றிக்கொண்டதாக தெரிவித்தனர்.

திருக்கல்யாணத்திற்கு பிறகு தீபாராதனைகள் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து நாளை தேரோட்டமும் வரும் 30ம்தேதி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறவுள்ளது.