பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மக்கள் வெள்ளத்தில் பெரிய தேரும், சிறியதேரும் ஒய்யாரமாக பவனி வந்தது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சங்கர மீனாட்சி சுந்தர மகாதேவா கோசங்களுடன் வடம்பிடித்து இழுக்க நான்கு மாசி வீதிகளிலும் மிகச்சிறப்பாக நடந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. சுந்தரேசுவரர் சுவாமி, பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் காலை எழுந்தருளினர். மதுரை கீழ மாசிவீதியில் தேரடித் தெருவிலிருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பக்திப்பரவசத்தோடு தேரை வடம்பிடித்து இழுக்க முதலில் பெரிய தேர் நிலையை விட்டு புறப்பட்டது. தொடர்ந்து சிறிய தேர் புறப்பட்டது. பக்தர்கள் `ஹரஹர சங்கர மீனாட்சி சுந்தர, சோமசுந்தர” என கோஷம் எழுப்பி தேருக்கு வடம் பிடித்து இழுத்தனர். மேள,தாளங்கள் முழங்க கீழமாசிவீதி, தெற்குமாசிவீதி, மேலமாசிவீதி, வடக்குமாசிவீதிகளைச் சுற்றி வந்தது. தேரில் சுவாமி பவனி வரும்போது சம்ஹார கோலத்தில் வந்தார். தேரோட்டம் நடந்த நான்கு மாசி வீதிகளிலும் அதனைச் சுற்றிய வீதிகளிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ள மாய் காணப்பட்டது.

மதுரைமட்டுமின்றி தென்மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள்மத்தியில் ஒய்யாரமாக அம்மன் மற்றும் சுவாமி தேர்கள் என இரண்டு தேர்களும் ஆடி அசைந்து மிதந்து வந்தது காண்பதற்கு சிறப்பாக இருந்தது. இதனிடையே சித்திரைத்திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30ம்தேதி நடைபெறுவதையொட்டி இன்று மாலை அழகர் கோயிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டு, நாளை கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெருகிறது. 30ம்தேதி தங்க குதிரை வாகனத்தில் பெருமாளுக்கு அலங்காரம் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டு சித்ரா பவுர்ணமி நாளில் காலை ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண தென்மாவட்டம் முழுவதுமிருந்தும் பல லட்சம் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இதனால் மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.